"ஒரு நாளாசும் சண்ட போடாம, அழுகாம, சந்தோசமா பள்ளிக்கூடம் போறியா டா? தினமும் இதே வேலயாப் போச்சு. பள்ளிக்கூடம் போறதுன்னா உனக்கு ஏன் அவ்வளவு வருத்தமா இருக்கு? உன்னைய என்ன பக்கத்து வீட்டு புள்ளைங்க மாதிரி கட்டையடுக்க சொல்றமா? இல்ல வேற வேலை ஏதாவது சொல்றமா? படிக்கிறது மட்டும்தானடா உனக்கு வேல! அதுக்கு உனக்கு எங்க வலிக்குது? "செல்வி"யப்பாரு ஒரு நாளாவது பள்ளிக்கூடம் போக அழுத்திருப்பாளா?" என்று அம்மா சொல்லும்போதே செல்வம் ஏறெடுத்து செல்வியைப் பார்த்தான். செல்வி வேண்டுமென்றே இன்னமும் அகலமாக சிரித்து தம்பியின் முகத்தில் அவமானத்தை அள்ளிப் பூசினாள். இப்போது ஏதாவது செய்தாகவேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டான் செல்வம். தப்பிக்கும் வழியில் தடைகள் இல்லை என்பதை உறுதி செய்வதற்காக சுற்றும் முற்றும் பார்த்தான்.
அடுப்படியில் அம்மா தோசை சுட்டுக் கொண்டிருந்தார், அம்மாவின் அம்மா "பாப்பா கிழவி", சுவற்றில் தன்னை சாய்த்துக் கொண்டு சேலையும் பாவாடையும் சேர்த்து செய்தித்தாள் போல முட்டிக்கு மேலே உருட்டி வைத்துவிட்டு கால்வலி தைலத்தை முட்டியில் தேய்த்துக் கொண்டு "எனக்கு ஒரு சாவு வரமாட்டேங்கிது!" என்று எமனிடம் புகார் கொடுத்துக் கொண்டிருந்தார், செல்வி இரண்டாவது தோசையை மடக்கி தன்னுடைய "அண்டா" வாயில் திணித்துக் கொண்டிருந்தாள். இதெற்கெல்லாம் மேலாக வீட்டில் அப்பா வேறு இல்லை. இதுதான் சமயம் யாரும் தன்னை பிடிக்க முடியாது என்பதை உறுதி செய்துகொண்டு, "கூடலிங்கம்" மஞ்சப்பையில் நோட்டு புத்தகங்களை அள்ளிப் போட்டுக் கொண்டு, இடது கையில் பையை இறுக்கமாக பிடித்துக் கொண்டு, வலது கையை மடக்கி தயாராக வைத்துக் கொண்டு செல்வியின் அருகில் மெதுவாகச் சென்றான்.
தோசை + சாம்பாரின் ருசியில் மயங்கி இருந்த செல்வி, தம்பியை கவனிக்கவில்லை. செல்வம் தான் வந்த அதே வேகத்தில் செல்வியின் தலையில் "நறுக்" வைத்தான். செல்வி அழுவதற்கு முன்பாகவே, பாப்பா கிழவி ஒப்பாரியை ஆரம்பித்து விட்டார், "கொலகாரப் பாவி, ஏன்டா தங்கச்சிய இப்படி போட்டு அடிக்கிற" என்று செல்வத்திடம் கோபிக்க, "செல்வி எனக்கு அக்கா, தங்கச்சி இல்ல கிழவி, உனக்கு சாவு தானே வேணும் இந்த தர்றேன்" என்று சுவரில் சாய்ந்திருந்த பாட்டியை முன்புறம் இழுத்து குனிய வைத்து முதுகில் கும்மினான். "அய்யய்யோ, என்னைய கொல்றான், என்னைய கொல்றான்" என்ற கூப்பாடு தொடங்கும் போது, தாவி குதித்து வீட்டிலிருந்த தப்பித்தான் செல்வம். பள்ளியின் மீதிருந்த கோபத்தை அக்காவின் மீதும், பாட்டியின் மீதும் திருப்பிய திருப்தி நெடுநேரம் நீடிக்கவில்லை. அதற்குள் பள்ளி வந்து விட்டது, தான் வந்த வேகத்தை விட வேகமாக பள்ளி தன்னிடம் வந்து விட்டது என்பதை அறிந்து, கலக்கும் வயிறுடன் உள்ளே செல்ல மனமில்லாமல் வாசலிலேயே நின்று தெருவை கவனித்தான்.
அந்த குறுகிய தெருவில், வலதுபுறம் பள்ளி இருந்தது. வேகமாக இடதுபுறம் இருந்த மீனாட்சி பாட்டி கடையின் அருகில் சென்று நின்று கொண்டான் செல்வம். சாக்கடையின் மீது ஒரு பெரிய பலகையைப் போட்டு, அதன் மீது வகை வகையான பண்டங்களை அடுக்கியிருந்தாள் மீனாட்சி பாட்டி, பண்டங்களை மேலும் அலங்கரித்தன ஈக்கள். ஈக்களைப் பார்க்க செல்வத்திற்கு பொறாமையாக இருந்தது. அவைகளைப் போல இங்கேயே மாலை வரை உட்கார்ந்து விட்டு, அப்படியே வீட்டுக்கு போய் விடலாம் என்ற எண்ணம் வந்தபோது, தண்டவாள கம்பியில் சுத்தியால் அடித்து செல்வத்தின் கனவை களைத்தார் பள்ளியின் காவலர். மணியோசை கேட்டு அனைவரும் பள்ளியின் உள்ளே ஓட, செல்வமும் அந்த மந்தையில் இணைந்தான்.
முதல் வகுப்பு தொடங்கும் வரைதான் செல்வத்திற்கு பள்ளியின் ஒவ்வாமை இருக்கும், பின்பு அது மறைந்து விடும் அப்படி ஒரு வினோத நோய் அவனுக்கு. முதல் வகுப்புக்கு வழக்கம் போல வகுப்பாசிரியர் முத்தையா வந்தார். வருகைப் பதிவு முடிந்தவுடன், கரும்பலகையில் வந்தவர்கள் மற்றும் வராதவர்களின் புள்ளி விவரங்களை பதித்துவிட்டு தனது பாடத்தை தொடர்ந்தார். செல்வத்தின் கண்கள் கரும்பலகையில் மையல்கொள்ள, மனம் மட்டும் மீனாட்சி பாட்டியின் பண்டத்தில் மொய்க்கப் பறந்தது.
திடீரென "முட்டா மூதேவி, செத்த பயலே, இங்க நான் கழுதையா காத்திக்கிட்டு இருக்கேன், அங்க நீ என்னால பண்ணுத?" என்று முத்தையா ஆசிரியர் கனிவுடன் குசலம் விசாரிக்க, திடுக்கானான் செல்வம். நன்றாக மாட்டிக் கொண்டோம் என்று தெரிந்து மெல்ல எழுந்து நின்று ஒன்றும் புரியாமல் விழித்தான், மனதுக்குள் அன்று காலை அக்காவையும், பாட்டியையும் மொத்தியது நினைவில் வந்து மிரட்டியது. "சரி, இன்னைக்கி கோட்டா கலையிலையே கெடைக்கப் போகுது" என்று மனதை திடப்படுத்திக் கொண்டு, பூசைக்கு தயாரானான். "ஏ! செத்த கூவ, செனக் கூவ, செல்வம்! நீ எதுக்குல நிக்க? உக்காருல" என்று பரிவுடன் செல்வத்தை அமரச் சொன்னார் ஆசிரியர் முத்தையா. அப்போதுதான் தனக்கு பின்னால் மாப்பிள்ளை பெஞ்சிலிருந்து "நல்லை புன்னை வனம்"மும் "சொல்லுக்கினியவன்"னும் நிற்பதை கண்டான்.
கையில் பிரம்புடன் வந்த ஆசிரியர், தன்னைக் கடந்து கடைசி பெஞ்சுக்கு சென்ற பின்பு தான் செல்வத்துக்கு பீதி குறைந்தது. ஆசிரியர் முத்தையா, பிரம்பை முறுக்கிய படி "இவனுக பேரப் பாரு, பேர... அடங்காப் பிடாரி பயலுவளுக்கு பேரு 'நல்ல வனமாம்' , அப்புறம் உன் பேரு என்னால? ஆ... " என்று ஆசிரியர் யோசிக்கும்போதே, அவரின் பின்புறமிருந்து ஒரு மாணவன் "குச்சிதின்னி சார்" என்றான். பதில் கேட்டு ஆத்திரமடைந்த ஆசிரியர், "அடங்காப்பிடாரி வாய்மூடு" என்று அவனை அடக்கி விட்டு, "உன்பேரு சொல்லுக்கினியவன் தான... வெளக்கமாறு... வெளக்கமாத்துக்குப் பேரு பட்டுக் குஞ்சம்னு வச்ச மாதிரி, நீட்டுங்கல கைய..." என்று பாரபட்சம் ஏதுமின்றி இருவருக்கும் சமமாக சன்மானங்களைப் பகிர்ந்தளித்தார். குற்றம் நடந்தது என்ன? அதன் பின்னணியில் இருக்கும் அன்னிய சக்திகள் யாவை என்று தெரிந்து கொள்ள நாங்கள் அனைவரும் ஆர்வமாக இருந்தோம். எதுவாக இருந்தாலும் மதிய உணவு இடைவேளை வரை காத்திருப்பதைத் தவிர வேறு வழியில்லை. சில சமயங்களில் பூசை வாங்கியவருக்கும் கூட காரணம் என்னவென்று தெரியாது, அதனால் மர்மமுடிச்சு அவிழாமலே போய்விடும் அபாயமும் உண்டு.
ஒருவழியாக உணவு இடைவேளை மணியடித்தது, ஆசிரியர் முத்தையா வகுப்பை விட்டு வெளியேறியதும் மாணவர்கள் அனைவரும் துக்கம் விசாரிக்க கடைசி பெஞ்சில் கூடினார்கள். "டேய் குச்சிதின்னி, நீங்க ரெண்டு பேரும் என்னடா பண்ணீங்க, ஏன் சாரு உங்கள அடிச்சாரு?" என்று தொடங்கினான் ஒருவன். இனியவன் தன்னுடைய கணக்குப் புத்தகத்தை திறந்து உள்ளேயிருந்து வட்டமான சிறிய காகிதம் ஒன்றை வெளியே எடுத்தான். அதை தனது நாசிக்கு அருகில் கொண்டு வந்து பலமாக உறிஞ்சினான். காகிதம் உயிர்பெற்று துடித்தது. "நேத்து சாய்ங்காலம் சாப்டது, இன்னும் எப்பிடி மணக்குது பாரு" என்று மற்ற மாணவர்களுக்கு அருகில் காகிதத்தை கொண்டு சென்றான். செல்வத்திற்கு மெய்யாகவே அந்த மனம் தித்திப்பை நினைவூட்டி நாவினை நனையச் செய்தது, உடனே நனைந்த நாவினால் இதழ்களையும் ஈரமாக்கி, மேலும் தகவலை கேட்க ஆர்வமானான். "இதுக்கு பேரு என்னடா?" என்று அதில் ஒருவன் கேட்க. "இதுதாண்டா அனார்கலி" என்று தேவரகசியம் உடைத்தான் இனியவன். "அனார்கலி யா அப்பிடின்னா..." என்று வந்த கேள்விக்கு, "இந்த தேர்வர்கள்லாம் இருக்காங்கல்ல, அவங்க சாப்பிர்ரதாம்" என்று இனியவன் அளக்கத் தொடங்கும் போதே, ஒருவன் குறுக்கிட்டு, "நாங்க கூட தேவர் தான், ஆனா இத சாப்ட்டதில்லையே" என்றான். இனியவன் சலிப்புடன், "நான் சொன்னது மேல உள்ள தேவர்கள், அவங்க சாப்பிடுறது" என்று கூறிவிட்டு மதிய உணவைச் சாப்பிட்ட தொடங்கிவிட்டான்.
இனியவன் கூறியதைக் கேட்டதிலிருந்து, செல்வத்திற்கு அனார்கலியை ஒரு முறையாவது சாப்பிட்டே தீரவேண்டும், அதுவும் வகுப்பில் இனியவனுக்கு அடுத்து சாப்பிட்டது தானாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் நிலைத்து விட்டது. மதிய வகுப்பு முழுவதும் அனார்கலியின் நினைவிலேயே கடந்தது. மாலை பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்ததும் அம்மாவிடம் நடந்ததை கூறி தனக்கு "அனார்கலி" வேண்டும் என்றான். இதைக் கேட்ட அவன் அம்மா "அதெல்லாம் சரி, அனார்கலிக்கும், தேவர்களுக்கும் என்னடா சம்மந்தம்" என்று சிரித்தார். "அதெல்லாம் எனக்குத் தெரியாதுமா, இந்த ரெண்டு நாள்ல அப்பாகிட்ட சொல்லி வாங்கிக் குடுமா, திங்ககெலம பள்ளிக்கூடம் போகும்போது எல்லார்கிட்டையும் நான் அனார்கலி சாப்ட்டத சொல்லணும்" என்று மிரட்டலாக கெஞ்சினான் செல்வம். "சரி ஒரு நாளாவது நீ சந்தோசமா பள்ளிக்கூடம் போவேன்னா, கண்டிப்பா அப்பாகிட்ட சொல்லி வாங்கிட்டு வரச்சொல்றேன்" என்று அம்மா நம்பிக்கையளித்தார்.
"பாப்பா" பாட்டி, அக்கா அனைவரும் தூங்கியாகி விட்டது, செல்வம் போர்வைக்குள் தன்னை புதைத்துக் கொண்டு தூங்குவது போல அப்பாவுக்காக காத்திருந்தான். இரவு நெடுநேரம் கழித்தே அப்பா வீட்டுக்கு வந்தார். சில நிமிடங்களில் அம்மா, அப்பாவுக்கு இரவு உணவை பரிமாறத் தொடங்கினார். அப்போதுதான் குளிப்பாட்டி ஈரம் காயாத "புதிய" பழைய சோற்றை பிழிந்து தட்டில் குவித்தார். பழைய சோற்றைக் கண்டதும் அப்பாவின் முகம் துவண்டது, "பூரி, பொங்கல், வட அந்தமாதிரி ஏதாவது பண்ணலாம்ல" என்ற அப்பாவின் பரிந்துரையை புறக்கணித்து விட்டு, "சாம்பார இப்பதான் சுடவச்சேன் ஊத்தவா?" என்று கேட்டபடியே அப்பாவின் பதிலுக்காக காத்திராமல், தட்டில் குவிக்கப் பட்டிருந்த பழையசோற்றின் மீது சாம்பாரை வாரி இறைத்தார். சாப்பிடாமல் போய் தூங்கிவிடலாமா என்ற எண்ணம் தோன்றினாலும், மீதி இருந்தால் நாளையும் இதே பழைய சோறுதான் எனவே மனமில்லாமல் சோற்றையும், குழம்பையும் பிசையத் தொடங்கினார்.
அமைதியின் சப்தம் காதைப் பிளக்கவே, "வேலைக்கு போன எடத்துல என்னாச்சு?" என்று தொடங்கினார் அம்மா. "எட்டு மணிக்கே வந்திருப்பேன், வீட்டுக்கு கெளம்பும்போது ஒரு வேல சொல்லிட்டாரு, அத முடிச்சிட்டு வர இவ்வளவு நேரம் ஆயிடுச்சி" என்று பதிலளித்து விட்டு, மனமில்லாமல் முதல் கவளத்தை வாயில் திணித்தார் அப்பா. "சரி, வேல முடிஞ்சதுல்ல, உங்க சார் காசு கொடுத்தாரா?" என்று அம்மா கேட்டதும், அப்பா சலிப்புடன் "எங்க, தேங்க்ஸ்னு சொல்லிட்டாரு" என்றார் குனிந்தபடியே. "அந்த தேங்க்ஸ வச்சி அண்ணாச்சி கடையில ஒரு கிலோ அரிசி வாங்க முடியுமா? இனிமே அந்த ஆளு வேலைக்கு கூப்பிட்டா போகாதீங்க" என்று அம்மா கொதிக்க, "ஏய் நீ என்ன, என் வேலைக்கு வேட்டு வச்சிருவ போல. ஆபீஸ்ல அவருக்கு கீழ நான் வேல பாக்குறேன். கொஞ்சம் அப்பிடி இப்படி தான் இருக்கும். வேற ஒரு வேல பாக்கும் போது சேத்து கொடுப்பாரு. விடு, விடு... சரி பசங்க தூங்கிட்டாங்களா?" என்று பேச்சை திசை திருப்பினார். "எல்லாரும் தூங்கிட்டாங்க, செல்வம் தான் ஏதோ 'அனார்கலி'னு புதுசா ஒரு ஒரு ஸ்வீட் பாம்பே கடையில வந்துருக்காம் அது வேணும்னு கேட்டான், அடுத்து நீங்க பஜாருக்கு போகும் போது வாங்கிட்டு வந்துருங்க" என்று அம்மா சொன்னது கேட்ட பிறகு தான் செல்வத்துக்கு நிம்மதியாக இருந்தது. திருப்தியாக அனார்கலியின் நினைவுகளைச் சுமந்து தூங்கச் சென்றான்.
மறுநாள் காலையிலிருந்தே செல்வம் அனார்கலியின் தரிசனத்திற்காக காத்திருந்தான். ஒவ்வொருமுறை அப்பா வெளியில் சென்று வரும் போதெல்லாம் அனார்கலியைச் சுமந்து வருகிறாரா என்றே முதலில் பார்த்தான். அவளின் புண்ணிய தரிசனம் சனிக்கிழமை கிடைக்கவில்லை, ஆசை தீர அழுதுவிட்டு தூங்கிவிட்டான். ஞாயிறு மதியம் வெளியில் வேலைக்குச் சென்ற அப்பா வெகுநேரம் ஆகியும் திரும்பவில்லை. மீண்டும் அவளின் தொலைவுத் துயர் தாங்காமல் அழுதது செல்வத்திற்கு நினைவிருக்கிறது, ஆனால் அயர்ந்து எப்போது தூங்கினான் என்பது நினைவில்லை.
திடீரென விழித்தெழுந்தவன் விடிந்து விட்டதை உணர்ந்தான். பொறுப்பில்லாமல் தூங்கியதை நினைத்து வருந்திவிட்டு, சமையலறைக்கு ஓடினான். அங்கே ஓரத்தில் ஒரு மூலையில் மிகவும் பரிட்சயமான அந்த காகிதம் சுருண்டு கிடந்தது. பார்த்தவுடன் அடையாளம் கண்டுகொண்டான் செல்வம். அது நிச்சயமாக அனார்கலி போர்த்திவந்த முகத்திரைதான். "இந்த முள்ளுவாங்கி செல்விதான் ராத்திரி சாப்ட்டிட்டு பேப்பர இங்க போட்ருக்கா சோம்பேறி" என்று திட்டிக்கொண்டே அங்கே சமைத்துக் கொண்டிருந்த அம்மாவை சட்டை செய்யாமல் பல தட்டுகளில் அடுக்கி வைக்கப் பட்டிருந்த பாத்திரங்களை உருட்டினான். "என்னடா வேணும், ஏன் எல்லாத்தையும் உருட்டிக் கிட்டிருக்க?" என்று அம்மா கேட்க, "அனார்கலி எங்கம்மா, அப்பா வாங்கிட்டு வந்தாரா?" என்று கேட்டுவிட்டு ஆர்வமுடன் அம்மாவையே பார்த்துக் கொண்டிருந்தான். "ஆமா, அப்பா வாங்கிட்டு வந்தாரு" என்று சிரித்துக் கொண்டே அம்மா சொல்ல, ஆனந்தத்தில் துள்ளிக் குதித்தான் செல்வம். "எங்க என்னோட பங்கு, குடு, வேகமா எடும்மா" என்றான் செல்வம் ஏக்கமாக.
அம்மா சற்று குழப்பத்துடன், "நீ தான் நேத்தே சாப்ட்டையேடா, மறுபடியும் கேட்டா எங்க போறது? இனிமே வாங்கினாத்தான் உண்டு" என்றார். ஒன்றும் புரியாத செல்வம் எரிச்சலுடன், "என்னமா சொல்ற, நேத்தே சாப்பிட்டேனா? நான் தான் தூங்கிட்டேனே பெறகு எப்பிடி சாப்ட்டிருப்பேன்?" என்று மேலும் குழம்ப. "ஆமாடா, அப்பா நேத்து ரொம்ப லேட்டா தான் வந்தாரு, வந்த உடனே உன்ன எழுப்பி சாப்பிட வைக்கச் சொன்னாரு. நானும் உன்னையம், செல்வியையும் எழுப்பி சாப்பிட வச்சேனே! ஓ மறந்துட்டியா? அதோ அங்க பாரு, சாப்பிட்டு நீ போட்ட பேப்பர் கூட அங்கேயே இருக்கு. அதை எடுத்து குப்பையில போட்று" என்று சொல்லிவிட்டு வேலையத் தொடர்ந்தார்.
செல்வத்துக்கு தலை சுற்றுவது போலிருந்தது, "ஓ" வென்று அழுதான். அதுவரை அமைதியாக இருந்த அம்மா "டேய் குண்டி மறந்த எடுபட்ட பயலே, தின்னுபோட்டு மறந்துட்டா அதுக்கு யாரென்ன செய்ய? மிட்டாய் கேட்ட வாங்கி குடுத்தாச்சு, ஒழுங்கா அழுகாம பள்ளிக்கூடம் போயிரு, இல்ல பாத்துக்கோ" என்று கொஞ்சம் சர்க்கரையை அள்ளி செல்வத்தின் வாயில் போட்டுவிட்டு, "எந்த பேர்ல இருந்தாலும் இனிப்பு இனிப்புதான்" என்று சொல்லி செல்வத்தின் _____ அங்கேயே புதைத்தார்.
வேறு வழியில்லாமல் செல்வம் துக்கத்தை அடக்கிக் கொண்டு அனார்கலியின் முகத்திரையை பத்திரப் படுத்தினான். எவ்வளவு முயற்சித்தும் முடியாமல் அன்றும் அழுதுகொண்டே பள்ளிக்குச் சென்றான் செல்வம் என்கிற அந்த சலீம்.
"என்னுடைய காதலியின் முகத்தை மீண்டும் ஒருமுறை பார்க்க இறைவன் கருணனை காட்டினால், நான் இறந்த பின்னும் கூட அவருக்கு நன்றிக்கடன் செலுத்திக் கொண்டே இருப்பேன்"
- மஜ்னூன் சலீம் அக்பர்
"அனார்கலி" - 1990 களில் கோவில்பட்டியில் இருக்கும் ஒரு வடஇந்திய இனிப்பக்கத்தில் விற்கப்பட்ட மிகவும் சுவையான இனிப்பு. அனார்கலியின் புகைப்படம் கிடைக்கவில்லை, ஒரு கோணத்தில் அனார்கலி இப்படித்தான் இருக்கும்.